சமஸ்கிருத கிராமம்!

on Sunday, November 21, 2010

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் சந்தோஷமாகப் பரந்து விரிந்து துள்ளலோட்டம் போடுகிறது துங்க பத்ரா என்ற இரட்டை நதியின் துங்கா. அதன் கரையில் அமைந்திருக்கிறது மத்தூர்.
காலையில் ஆறு மணிக்கு மத்தூரின் அனைத்து வீட்டு வாசல்களிலும் பெண்கள் தண்ணீர் தெளித்து, கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். தெரு ஓரத்தில் ஆங் காங்கே பசு மாடுகள் படுத்து, நின்று, நடந்து கொண்டு இருந்தன. இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? இந்தக் கிராமத்தில் பேச்சு மொழியே சம்ஸ்கிருதம் தான்.


எப்படி சம்ஸ்கிருதத்துக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கிடைத்தது? “தொன்றுதொட்டே இந்தக் கிராமத்தில் சம்ஸ்கிருதம் பேசும் வேத பண்டிதர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தபோதிலும், இந்தக் கிராமத்தினை முழுமையான சம்ஸ்கிருதம் பேசுகிற அளவுக்கு மாற்ற வேண்டும் என்று பிள்ளையார் சுழி போட்டவர் உடுப்பி பெஜாவர் மடத்தின் பீடாதிபதி தான்” என்று கூறுகிறார், சம்ஸ் கிருத பாரதி என்ற அமைப்பின் மத்தூர் கிளை அமைப்பாளர் ஸ்ரீநிதி. இவர், பக்கத்து நகர மான ஷிமோகாவில் உள்ள கல்லூரியில் காமர்ஸ் துறை பேராசிரியர்.


1981ல் பெங்களூருவில் சம்ஸ்கிருதப் பேச்சுப் பயிற்சி பெரிய அளவில் தொடங்கியது. தினம் இரண்டு மணி நேரம் வீதம் பத்து நாட்களுக்குள் சம்ஸ்கிருதத்தில் பேசுவது எப்படி என்று சொல்லித் தரும் அந்தப் பயிற்சிக்கு, மாநிலம் முழுமையிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மத்தூரில் மூன்று பேட்ச்களாக நடந்த பயிற்சி வகுப்புகளில் சுமார் 100 பேர் சேர்ந்து, சம்ஸ் கிருதத்தில் பேசக் கற்றுக்கொண்டார்கள்.


அந்தப் பயிற்சி வகுப்புகளின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உடுப்பி பெஜாவர் மடத்தின் பீடாதிபதி, தம் ஆசி உரையில், ‘ஏசகா கிராமக சம்ஸ்கிருத கிராமக’ (சம்ஸ்கிருதம் பேசும் முழுமையான கிராம மாக) என்று குறிப்பிட்டார். அவரது ஆசியுரை அளித்த உத்வேகத்தில் மத்தூர் கிராமத்து மக்கள் அனைவருக்கும் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் பணியை ஆரம்பித்தோம். இன்றும் எங்களுடைய முயற்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்கிறார் ஸ்ரீநிதி.மக்கள் மத்தியில் சம்ஸ்கிருத அறிவை வளர்க்க சம்ஸ்கிருத பாரதி, சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை, தோட்டம், டி.வி, ஃப்ரிட்ஜ், விளக்கு என்று வீட்டுக்குள்ளே இருக்கும் இடங்கள் மற்றும் பொருட்களின் பெயர்களை சம்ஸ்கிருதத்தில் அச்சிட்டு ஸ்டிக்கர்களாக்கி, அவற்றை வீட்டில் ஒட்டி வைக்கச் சொல்லி வினி யோகிக்கிறோம். அந்த வார்த்தைகளைத் தங்கள் உரையாடல் களின்போது பயன்படுத்துகிறார்கள். பள்ளி மாணவர்களுக்கு சம்ஸ் கிருதத்தில் போட்டிகள் நடத்தி, பரிசுகள் அளித்து ஊக்குவிக்கிறோம்.


மத்தூரில் வேத பண்டிதர்கள் வசிக்கும் நாலைந்து தெருக்களைத் தவிர மற்ற தெருக்களில் பலவிதமான ஜாதி, இன, மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து வசிக் கிறார்கள். அவர்களுக்கு சம்ஸ்கிருதம் தெரியாவிட்டாலும், அவர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் சம்ஸ்கிருதம் கற்றுக் கொள்கிறார்கள். இது மத்தூரில் வசிக்கும் இஸ்லாமிய இனத்தவருக்கும் பொருந்தும். அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர், தங்களுடைய குழந்தைகளும் சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தின்பேரில், மத்தூர் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள்” என்கிறார் ஸ்ரீநிதி.


காலம் மாறிவிட்டது. மத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் படித்து விட்டு, பல்வேறு ஊர்களுக்கும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். அவர்களில் சம்ஸ்கிருத அறிவு காரணமாகவும், கம்ப்யூட்டர் பயிற்சி காரணமாகவும், கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் நுழைந்து நிறைய சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். படித்த பெண்கள், இந்தக் கிராமத்தில் வசிக்கும் வேதம் படித்த இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்ள மிகவும் தயங்குகிறார்கள். வாழ்க்கை என்பது பணம் சம்பாதிப்பதற்கான ஓட்டம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை” என்று ஆதங்கப்படுகிறார் வேத விற்பன்னரான அஸ்வத் நாராயண் அவதானி.


தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளியாக மத்தூருக்கு வந்து, இப்போது வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கோபால், “மத்தூர் ரொம்ப அமைதியான ஊருங்க; ஜனங்க நல்ல சுபாவம் கொண்டவங்க; இங்கே ஜாதிப் பிரச்னை எதுவும் வந்ததில்லை; போலீஸ் கேசு எதுவும் ஆனதில்லை” என்கிறார்.
சம்ஸ்கிருதம் சொல்லித் தரும் சாரதா விலாசம் பள்ளியின் சம்ஸ்கிருத ஆசிரியர் கிரீஷை அழைத்துக்கொண்டு மத்தூர் தெருக்களில் ஒரு வீதி உலா வந்தோம். கண்ணில் பட்ட ஸ்கூல் குழந்தைகளிடம் எல்லாம் அவர் சம்ஸ்கிருதத்தில் பேச, அவர்களும் சம்ஸ்கிருதத்திலேயே தயங்காமல் பதில் சொன்னார்கள். தெருவில் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த சுதேஜாவை நிறுத்த, கிரீஷ் அவனுடன் சில நிமிடங்கள் வெகு சரளமாக சம்ஸ்கிருதத்தில் உரையாடியதைக் கேட்க முடிந்தது.


இந்தியாவின் வேறு எந்தக் கிராமத்திலும் இல்லாத அளவுக்கு இங்கே அதிகமான எண்ணிக்கையில் சம்ஸ்கிருதம் பேசுகிறவர்கள் வசிக்கிறார்கள். ஆனாலும், ஊரின் பெயர்ப் பலகை கன்னடத்தில்தான் எழுதப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் சம அளவில் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எங்கள் ஊரை, “நூறு சதவிகிதம் சம்ஸ்கிருதம் பேசுகிறவர்கள் வசிக்கும் கிராமம் என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? ஒரு நாள் நிச்சயமாக அந்த மாதிரியான ஒரு பெருமை இந்தக் கிராமத்துக்குக் கிடைக்கும். அன்று அதைப் பறைசாற்றும்படியாக ஊர் பெயர்ப் பலகையை வைத்துப் பெருமைப்படுவோம்” என்கிறார் ஸ்ரீநிதி.மத்தூர் வேத பண்டிதர்களின் நதி மூலம், தமிழ்நாடு. கிருஷ்ணதேவராயர் காலத்தில் ஒரு பிரம்மாண்டமான யாகம் நடத்தியபோது, தென் தமிழ்நாட்டின் பலகிராமங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப் பட்டார்களாம். யாகம் முடிந்தவுடன், அவர்களுக்கெல்லாம் ஏராளமாக நில புலன்களை அளித்து, தம் சாம்ராஜ்ஜியத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி கேட்டுக்கொள்ள, அவர்களும் ஆங் காங்கே சிறு சிறு கிராமங்களாக செட்டில் ஆகிவிட்டார்களாம். அப்படி உருவான ஊர்களில் ஒன்றுதான் மத்தூர். இன்றுகூட வேத பண்டிதர்களுக்கு வருமானம் அவர்களுடைய பாக்குத் தோப்புகளில் இருந்துதான். சொல்லப் போனால் மத்தூர் மக்களின் வாழ்க்கையும், கிராமத்தின் பொருளாதாரமும் அவற்றைச் சார்ந்தே உள்ளன. தெருக்களில் நடந்து செல்லும்போது கிராமத்துப் பெண்கள் பாக்கு காய்களை உடைத்துக் கொட்டைகளை எடுத்துக் கொண்டிருப்பதையும், வீட்டுக்கு வெளியில் பாக்கு காயப் போட்டிருப்பதையும் காணலாம்.


Sources : Kalkhi Magazine
 நன்றி : கல்கி நாளிதழ்

1 comments:

Anonymous said...

The Dravidian parties in Tamilnadu are prejudiced to the extent they insist their children to learn English which is the mother tongue of a country 5000 miles away and who have kept us as slaves(It's shame) rather than learning Sanskrit the language which could be a link language and it is also a very old language and no other state will oppose it.

Post a Comment

Page Visits


Stats